திருச்சபைகளுக்கு நிர்வாகியின் வேண்டுகோள்

கரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பை அனைவரும் அறிவர். நமது தேவாலயங்கள் உட்பட அனைத்து வழிபாட்டு இடங்களிலும் மக்கள் கூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது.

சில திருச்சபைகள் மிக வசதியான சபைகள். பல திருச்சபைகள் ஓரளவு வசதியுள்ள திருச்சபைகள். பல திருச்சபைகள் வசதியானது என்பதை அதன் வங்கி கணக்கும், டெபாசிட்டுமே தெளிவாக்கும். சுமார் 70% திருச்சபைகள் மேற் சொன்ன அளவுகோலுக்குள் வரும்.

இத்திருச்சபைகள் தங்களின் அசெஸ்மென்ட் தொகையை செலுத்துவதுடன், மேலும் கால் (1/4) பங்கை சேர்த்து CBO- விற்கு செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா பாதிப்பு இருக்கும் வரை – மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என நான்கு மாதங்களுக்கு – இந்த உதவியை செய்தால், வசதியற்ற திருச்சபையில் ஊழியம் செய்யும் போதகர்களுக்கு சம்பளம் அளிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

இச்சபைகள் அதிகப்படியாக அளிக்கும் அசஸ்மென்டை, பின்னர் அளிக்கும் அசெஸ்மென்டுகளில், மாதம் 10% என்ற முறையில் 10 மாதங்கள் தவணையில் பிடித்தம் செய்து கொண்டு மீதியை செலுத்தினால் போதும். காரணம், நிலைமை சரியான பின்னரும் வசதியற்ற சபைகள் உடனடியாக பாக்கி வைக்கப்பட்ட அசஸ்மென்டை செலுத்த இயலாது.

மேலும், நமது பள்ளிகளில் பணிபுரிவோர், நமது திருச்சபைகளை சேர்ந்த அரசுப் பணியில் பணிபுரிவோர், வசதியுடன் இருப்போர், வெளிநாடுகளில் இருப்போர் என்ற பலருக்கும் கரோனா நிவாரண நிதி கேட்டு, நான் இன்றே தனியாக வேண்டுகோள் விடுக்க உள்ளேன். இவர்கள் கருணையுடன் பெருமளவில் நிதி அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். அப்படி கிடைக்கும் நிதியும், இந்த சிரமமான நேரத்தில் போதகர்களுக்கு ஊதியம் கொடுக்க பயன்படுத்திக் கொள்ளப்படும்.

26-9-18-இல் நான் நிர்வாகியாக பொறுப்பேற்ற பின், CBO- விற்கு அசஸ்மென்ட் செலுத்துவதை முறைப்படுத்தி, போதகர்களுக்கு வங்கி மூலம் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்தேன். ஜனவரி 2019 முதல் 210 போதக வட்டங்கள் அசஸ்மென்ட் செலுத்தி வருகிறது. சிரமமான கரோனா காலத்திலும், இந்த ஏற்பாட்டை தொடருவதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்.

இந்த அசஸ்மென்டில் மாதாமாதம் வந்த சிறு உபரியின் மூலம் ஜனவரி 2020 வரை சேர்ந்ததை கொண்டுதான், 2013 முதல் ஓய்வு பெற்ற போதகர்களுக்கு பிப்ரவரி 2020 -இல் ஓய்வூதிய பலன்கள் (பிராவிடண்ட் பண்டு) வழங்கப்பட்டது; 2019-இல் கிறிஸ்துமஸ் கிப்டு சுமார் ரூபாய்  7 லட்சம் வழங்கப்பட்டது; 2013 முதல் கட்டப்படாமல் இருந்த சொத்துவரி உட்பட சொத்துவரி ரூபாய்  11 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது; சொத்து சம்மந்தமான ஆவணங்களை  கணினி மயமாக்குதல் (Digitalisation) வேலை தொடங்கப்பட்டது. கணினி மயமானதும், ஆவணங்கள் IELC இணையதளத்தில் பதிவிடப்படும் . இதன் விளைவாக கரோனா நெருக்கடியை எதிர் கொள்ள பண இருப்பு ஏதும் பெரிதாக இல்லை. கரோனா நெருக்கடி வரும் என்பது எவருக்கும் தெரியாதல்லவா?

இந்த நெருக்கடி காலத்தில், நானும் , எனது இரு செயலர்களும் சம்பளம் பெறாமல் பணிபுரிவது என்றும், நிலைமை சரியானதும் சம்பளத்தை எடுத்துக் கொள்வதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேண்டுகோளை ஏற்று, இதில் கேட்டுக் கொண்டுள்ளபடி திருச்சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் போதகர்கள் செயல்பட வேண்டும் என்றும், திருச்சபையினர் அசஸ்மென்டையும், கூடுதல் நிதி உதவியையும் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.